ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததை அடுத்து அந்த கடையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையின் உணவக உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர முரளி. இவர் கம்பி கட்டும் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவர் நேற்று பிற்பகலில் தன்னுடைய உறவினரின் காரியத்திற்காக ஆரணியில் உயர்தர சைவ ஹோட்டலில 35 சாப்பாட்டை பார்சல் வாங்கியுள்ளார்.
பார்சல் உணவை வீட்டிற்கு வந்தவுடன் உறவினர்களுக்க பரிமாற தொடங்கினார். அப்போது பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
எலி தலை
மீண்டும் மீண்டும் அது எலி தலைதானா என்பதை உறவினர்களிடம் ஊர்ஜிதம் செய்து கொண்ட முரளி, தனது உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோருடன் ஹோட்டலுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்த போலீஸார் ஹோட்டலுக்கு சென்று இறந்த எலியின் தலையை கைப்பற்றி உணவு பாதுகாபபு துறைக்கு அனுப்பி வைத்தனர்.

ஹோட்டல் மீது நடவடிக்கை
மேலும் தவறு இருப்பின் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததன் பேரில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஏற்கெனவே ஆரணியில் அசைவ ஹோட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயசு சிறுமியும் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 17 வயது சிறுவனும் உயிரிழந்த சம்பவம் நடந்து அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இது போன்றதொரு அஜாக்கிரதையான சம்பவம் மீண்டும் எழுந்துள்ளது.

உணவக சான்று ரத்து
இந்த நிலையில் எலி தலை இருந்ததாக சொல்லப்படும் சைவ ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதையடுத்து அந்த உணவகத்தின் உணவக சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான் ஹோட்டல்காரரும் உணவு சாப்பிடுவோரும் பாடுபடுகிறார்கள்.

உணவு சமைக்கும் போது
அவ்வாறிருக்கையில் உணவு சமைக்கும் போது அலட்சியபோக்கால் இது போன்று பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அது போல் உணவின் தரத்தையும் காலாவதியாகும் காலத்தையும் பார்க்காமல் அவர்களுடைய பொருள் வீணாகிவிட கூடாது என்பதற்காக அதை அப்படியே சமைத்து கொடுப்பதும் உயிரிழப்புகள், உடல் உபாதைகளுக்கு காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.