ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் 2வது சம்பவம்.. செல்லப்பிராணியாக வளர்த்த கங்காரு தாக்கி முதியவர் சாவு
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் தனது வீட்டில் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த கங்காருவே வீட்டு உரிமையாளரை தாக்கி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் நடந்த 2வது சம்பவம் ஆகும்.
ஆஸ்திரேலியா என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கங்காருவாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு கங்காருக்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் அதிகம்.
முன்னங்கால்களை தூக்கிக் கொண்டு இரண்டு கால்களால் தத்தி தத்தி செல்லும் கங்காருக்கள், ஒரே தாண்டுதலில் சுமார் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் விலங்கினம் ஆகும்.
கங்காரு கடித்து முதியவர் சாவு
கங்காருக்களின் மடியில் பை போன்று இருக்கும். அதில்தான் தனது குட்டியை வைத்துக்கொண்டு தாவி தாவி கங்காருக்கள் ஓடுவதை பலரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். பொதுவாக சாதுவான விலங்காகவே கங்காருக்கள் பார்க்கப்படுகின்றன. கங்காரு ஆஸ்திரேலியாவில் தோராயமாக 5 கோடிக்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் 77 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டில் செல்லப்பிராணி போல கங்காருவை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியில் அவர் வளர்த்து வந்த கங்காரு கடித்தே அவர் உயிரிழந்து இருந்த சோகமும் நடைபெற்றுள்ளது.
அச்சுறுத்திய கங்காரு
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ரெட்மோண்ட் நகரில் தான் இந்த சம்பம் நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- மக்கள் தொகை குறைந்த ரேட்மண்ட் நகரத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவர் காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக பக்கத்து வீட்டினர் அவசர சேவைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு ஆம்புலன்ஸ் குழுவினர் விரைந்து சென்றனர். ஆனால், அவருக்கு சொந்தமான வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்த கங்காரு ஆம்புலன்ஸ் குழுவினரை உள்ளே வரவிடாமல் அச்சுறுத்தும் வகையில் உலாவிக்கொண்டு இருந்தது.
முதியவர் உயிரிழந்தார்
பல வழிகளில் முயன்றும் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், வேறு வழியின்றி கங்காருவை சுட்டுக் கொன்றனர். பின்னர் காயம் அடைந்த முதியவரை மீட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த முதியவர் உயிரிழந்துவிட்டார். வனவிலங்கான கங்காருவை அவர் செல்லப்பிராணி போல வளர்த்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கடைசியில் தான் வளர்த்து வந்த கங்காருவே அவரை தாக்கியிருக்கலாம். சுட்டுக்கொல்லப்பட்ட கங்காரு எந்த வகையை சேர்ந்தது என இன்னும் கண்டறியவில்லை” என்று கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
86 ஆண்டுகளுக்குப் பிறகு
ஆஸ்திரேலியாவில் சுமார் 86 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற கங்காரு தாக்கி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். 1936 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் பகுதியில், பெரிய கங்காரு ஒன்றிடம் இருந்து தனது இரண்டு நாய்களை மீட்க முயற்சிக்கும் போது கங்காருவால் தாக்கப்பட்டு காயம் அடைந்து சில மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். அதன்பிறகு சுமார் 86 ஆண்டுகளுக்குப் பிறகு கங்காரு தாக்கி உயிரிழந்த சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கங்காருக்கள் சுமார் 2.2 மீட்டர் (7 அடிக்கும் மேல்) உயரமாக வளரக்கூடியவை. 70 கிலோ வரை அதன் எடை இருக்கும்.