இந்த மனிதருக்குள் இவ்வளவு சோகமா?..நீயா நானா நிகழ்ச்சியில் நடந்தது உண்மை இல்லையா?

இந்த வாரம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி இதனால் வரும் பிரச்சினை பற்றி பேசப்பட்டது.

அதில் அதிகம் விமர்சிக்கப்பட்டது ஒரு ஜோடி. அப்பாவி கணவரும், அலட்சியமாக பதிலளித்த மனைவியாலும் சமூக வலைதளங்களில் மனைவி அதிகமாக விமர்சிக்கப்பட்டார்.

தற்போது கணவர் தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் தன் மனைவி தனக்காக டயாலிசிஸ் செலவுகளை ஏற்று காப்பாற்றி வருவது பற்றியும் தாங்கள் ஜாலியான தம்பதி என்று பேட்டி அளித்துள்ளார்.

நீயா நானாவில் அதிகம் விமர்சிக்கப்பட்டதம்பதி

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடிகளில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஜோடி தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி ராஜா தம்பதி. நிகழ்ச்சியில் பேசிய சீனி ராஜா தன்னுடைய வியாபாரம் நஷ்டம் அடைந்ததை குறிப்பிட்டு, இதனால் தன் மனைவியின் உறவுகள் அனைவரும் தன்னை அலட்சியப்படுத்துவதாகவும், கடந்த ஆறு வருடமாக யாரும் தன்னிடம் பேசுவது கூட இல்லை. இதை என் மனைவியும் கண்டு கொள்வதில்லை என்று வருத்தப்பட்டார்.

கோபிநாத்துக்கு கோபம் வரவழைத்த பதில்

கோபிநாத்துக்கு கோபம் வரவழைத்த பதில்

பின்னர் அவருடைய மனைவியிடம் இது பற்றி கேட்ட பொழுது ஒருவேளை இவரது அந்தஸ்தை வைத்து அப்படி நினைக்கிறார்களோ என்னவோ அவருடைய அந்தஸ்து உயர்ந்தால் அவரை மதிக்கலாம் என்று பதில் அளித்தார். இது கோபிநாத்துக்கு கோபத்தை வரவழைத்தது. உங்கள் கணவரை உங்கள் தம்பி அலட்சியப்படுத்துகிறார் அது பற்றி ஒரு வார்த்தை கூடவா உங்களுக்கு கேட்க தோணவில்லை என்று கேட்டார். பின்னர் அவருடைய மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்திட கூட தன்னை அனுமதிப்பதில்லை மனைவியே கையெழுத்து போட்டுக் கொள்கிறார் என்று சொன்னார். “சார் அவர் ஒரு மணி நேரமாக அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று மனைவி சொன்னார்.

 அலட்சியமாக பேசி நெட்டிசன்களால் விமர்சிக்கப்படும் மனைவி

அலட்சியமாக பேசி நெட்டிசன்களால் விமர்சிக்கப்படும் மனைவி

“நான் படிக்கவில்லை, என் மகள் நன்றாக படிக்கிறார் அவர் வாங்கிய மார்க்கை பார்த்து நான் சந்தோசப்பட்டேன் அதற்காக பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று அவர் சொல்ல “இல்ல சார் அவருக்கு படிக்க வராது ஒவ்வொரு எழுத்தா கூட்டி படிச்சிட்டு இருக்கார் சார்” என்று பொதுவெளியில் தன் கணவரை மட்டம் தட்டுவது பற்றி கவலைப்படாமல் அந்த பெண் பேசியது கோபிநாத்துக்கு சற்று கோபத்தை வரவழைத்தது. “அவர் இன்னும் 90 களில் இருந்து வரவில்லை” என்று வேறு குற்றம் சாட்டினார் இந்த நிலையில் அவரது பதிலால் கோபிநாத் சற்றே கோபமாகி அந்த பரிசு பொருளை கொண்டு வாப்பா என்று சொல்லி “கடைசியில் தான் எப்பொழுதும் சிறப்பாக பேசியவர்களுக்கு கொடுப்போம் ஆனால் இந்த முறை ஒரு சிறந்த தந்தை என்கிற முறையில் இவருக்கு தருகிறேன்” என்று அந்த நபரை அழைத்து அவர் மகளை அழைத்து அவர் கையால் கோபிநாத் கொடுக்க வைத்தார்.

கணவர் சீனிராஜா தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டி

கணவர் சீனிராஜா தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டி

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இந்த தம்பதி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. சீனி ராஜாவின் மனைவியை கடுமையாக கண்டித்து விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தது. மீம்ஸ்கள் போடப்பட்டுள்ளன. விமர்சித்து செய்திகளும் வெளியாகின. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீனி ராஜா தன்னுடைய மகளுடன் பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டியை பார்த்த பொழுது நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த பல விஷயங்கள் தற்செயலாக நடந்தது என்பது தெரியவந்துள்ளது. முதலில் அவரது பேட்டியில் தான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளதாகவும் படிப்பு சரியாக வராததால் சென்னைக்கு வந்து விட்டதாகவும் மளிகை கடையில் வேலை செய்ததாகவும் தெரிவிக்கிறார்.

 மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசிய சீனிராஜா

மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசிய சீனிராஜா

பிறகு அவரிடம் உங்கள் மனைவி உங்களை எழுதப் படிக்க தெரியாதவர் என்பது போல் பேசுகிறாரே என்று கேட்ட பொழுது, “வீட்டுல அப்படி விளையாட்டாக பேசிக்கொள்வோம், அவர் அப்படி வேண்டுமென்று பேசுபவர் அல்ல, சாதாரணமாக நாங்கள் எங்களுக்குள் விளையாடிக் கொள்வதை அவர் பொதுவெளியில் அதே போன்று பேசி விட்டார் அதுதான் மற்றவர்களுக்கு தவறாக தெரிந்து விட்டது” என்று தெரிவித்தார். அதன் பிறகு உங்களுடைய மனைவி உங்களுடைய உறவினர்கள் வராதது பற்றிய கேள்விக்கும் அதே தொனியில் பதில் அளித்தார் என்று கேட்ட பொழுது “நான் கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு வந்தால் அவர்கள் எங்களைப்பார்க்க வருவார்கள் என்பது எங்கள் இருவருடைய கருத்துதான். ஒருவேளை அந்த அர்த்தத்தில் அவர் அதை சொல்லிவிட்டார்.

 நெட்டிசன்களால் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட தம்பதி

நெட்டிசன்களால் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட தம்பதி

பொதுவெளியில் இவ்வாறு பேசும்பொழுது அது வேறு மாதிரி ஒரு தோற்றத்தை மக்களுக்கு தெரிந்ததால் கடுமையாக விமர்சித்து விட்டனர். வந்த கமெண்ட்ஸ், ட்ரோல் எல்லாவற்றையும் பார்த்தபோது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது” என்றார். நீங்கள் குறைவாக சம்பாதிப்பதும் உங்கள் மனைவி அதிகமாக சம்பாதிப்பதும் வீட்டில் வாக்குவாதமாகி இருக்கிறதா என்று நெறியாளர் கேட்டார், “அப்படி எல்லாம் வந்ததில்லை, என் உடல் நிலை தெரியும் என் சிகிச்சைக்கே அவர் பணம் செலவழிக்கிறார் அப்படி இருக்கும்போது அவ்வாறு பேச்சு வந்ததே இல்லை என்றார். நாங்கள் பார்த்து வைத்த திருமணம் தான் ஆனால் லவ் மேரேஜ் போல் ஜாலியாக இருப்போம்” என்றார்.

 கிட்னி செயலிழந்து டயாலிசிஸ் செய்யும் நிலையில் சீனிராஜா

கிட்னி செயலிழந்து டயாலிசிஸ் செய்யும் நிலையில் சீனிராஜா

என்ன சிகிச்சை என்று கேட்ட போதுதான் அவருடைய சோகக்கதை தெரியவந்தது. சீனி ராஜாவின் கிட்னி செயலிழந்து உள்ளதால் அவர் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மாதத்திற்கு நான்கு தடவை அல்லது ஐந்து தடவை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். அவருடைய கையை காண்பித்த பொழுது கட்டி போன்று மூன்று இடங்களில் வீங்கி இருந்தது. என்ன இது என்று நெறியாளர் கேட்ட பொழுது அங்குதான் ஊசி தொடர்ச்சியாக குத்துவார்கள், அதனால் ஏற்பட்ட தழும்பு என்று அவர் சொன்ன போது திடுக்கிட வைத்தது. டயாலிசிஸ் அதிக செலவாகுமே என்று நெறியாளர் கேட்ட பொழுது ஆமாம் ஒருமுறை செய்ய 2500 ரூபாய் ஆகிறது என்று அவர் தெரிவித்தார்.

 சீனிராஜாவுக்குள் இவ்வளவு சோகமா? மனைவி உண்மையிலேயே போற்றத்தக்கவர்

சீனிராஜாவுக்குள் இவ்வளவு சோகமா? மனைவி உண்மையிலேயே போற்றத்தக்கவர்

மாதம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்தார். செலவை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது என்னால் எதுவும் செய்ய முடியாத நிலைமை. உடல்நிலை சரியாக இருக்கும் பொழுது வேலைக்கு செல்வேன் மற்ற நாள் வீட்டில் இருந்து விடுவேன். என் மனைவி தான் இந்த செலவை பார்த்துக் கொள்கிறார். என்னுடைய தந்தை வயதான காலத்தில் ரிட்டயர் ஆனவர் அவரும் எனக்கான மருத்துவ செலவை ஏற்றுக்கொள்கிறார். எனக்காக கஷ்டப்படுகிறார். என்னுடைய தந்தை வயதான காலத்தில் அவரை உட்கார வைத்து அவருடைய நல்லது, கெட்டது நான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் எனக்காக உழைக்கும் நிலையை பார்க்கும் பொழுது என் இயலாமையை நினைத்து கண்ணீர் வருகிறது என்று சீனி ராஜா வருத்தத்துடன் கூறினார்.

 தந்தையை வைத்து காப்பாற்ற முடியாமல் தந்தை தன்னை காப்பாற்றும் நிலை

தந்தையை வைத்து காப்பாற்ற முடியாமல் தந்தை தன்னை காப்பாற்றும் நிலை

இந்த வார்த்தையை அவர் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப சொன்னார். அவர் சொல்லும்போது அவருடைய நா தழுதழுத்தது. கண்ணீல் நீர் முட்டிக்கொண்டு வந்தது. தனது தந்தைக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர் வருந்துவது தெரிந்தது. அதேபோன்று அவருடைய மருத்துவ செலவுக்காக இன்றும் மனைவி எவ்வித சலிப்புமின்றி செல்வழிப்பதை குறிப்பிட்டார். நீயா நானா நிகழ்ச்சியில் அவருடைய மனைவியின் பேச்சும், அலட்சியமான பதிலையும் பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு கோபம் வருவது இயற்கையான ஒன்று. ஆனால் கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆராய்ந்து விசாரிப்பதே மெய் என்பது போல் ஒரு ஜாலியான தம்பதி தன்னுடைய கணவர் கிட்னி பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலைமையிலும் அவருடைய மருத்துவ செலவுகளை பார்த்துக்கொண்டு அவருடன் சந்தோஷமாக வாழும் மனைவி சாதாரணமாக பேசிய வார்த்தை அலட்சியமான வார்த்தையாக ஆகிவிட்டது என்று சொல்லலாம்.

 சீனிராஜாவின் நெஞ்சுரம் தற்கொலை செய்துக்கொள்பவர்களுக்கு சவுக்கடி

சீனிராஜாவின் நெஞ்சுரம் தற்கொலை செய்துக்கொள்பவர்களுக்கு சவுக்கடி

மற்றொருபுறம் சீனி ராஜா இவ்வளவு சோகமான நிலையிலும் அவர் சொன்ன வார்த்தைகள் சாதாரண சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் தற்கொலை செய்துக்கொள்பவர்களுக்கு சவுக்கடியாய் அமைந்தது. “வாழ்க்கையில் தன்னால் உழைக்க முடியவில்லை, உடல்நிலை சோர்வை தருகிறது வேலை செய்ய முடியும் வரை வேலை செய்கிறேன் மற்ற நேரங்களில் வீட்டிலிருந்து விடுகிறேன், ஆனால் எனக்கு உடல்நிலை சரியாகும் நான் பழைய நிலையை அடைவேன்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னார். இந்த வார்த்தைகள் அவருடைய நெஞ்சுரத்தை காட்டுகிறது. தைரியம் என்பது உடல் வலிமையில் வருவது அல்ல நெஞ்சுரத்தால் மட்டுமே வருவது என்பது பெரியோர் சொன்னது. பல எளியவர்கள் அதை நடைமுறையில் நிரூபிக்கிறார்கள். அதில் சீனிராஜா ஒருவர்.

 உதவி கேட்கும் சீனிராஜா

உதவி கேட்கும் சீனிராஜா

பலரும் நல்ல உடல் வலுவுடன் இருப்பவர்கள் சிறிய காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் பொழுது பல உடல் உபாதை உடன் வாழ்ந்து வரும் சீனி ராஜா போன்றவர்களின் இந்த தன்னம்பிக்கை பேச்சு மிகுந்த போற்றுதலுக்குரியது. சீனிராஜா போன்றவர்கள் தன்னுடைய சிகிச்சைக்காகவும், மகளின் படிப்புக்காகவும் செலவழிக்கும் தொகைக்கு மிகவும் கஷ்டப்படும் நிலை. அந்தப்போராட்டம் அவர்களுக்கு சோர்வைத்தரும். அவர் தன் மகளை எப்படியாவது படிக்க வைத்து டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய உடல்நிலை சராசரி மனிதனின் உடல் நிலையை தாண்டி சற்று சிக்கலான ஒன்றுதான் ஆனாலும் எதிர்கால வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் அவரது எண்ணத்தை நாம் மதிப்போம். இந்த நிகழ்ச்சியில் சீனு ராஜா ஒரு கோரிக்கையை மக்களுக்கு வைத்துள்ளார் தன்னுடைய சிகிச்சை செலவுக்கு அரசும், மக்களும் உதவி செய்தால் பேருதவியாக இருக்கும் என்று. இதன் மூலம் அவருக்கு உதவி கிடைத்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது நாமாகத்தான் இருப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.