தனது ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் படத்திற்காக தனது உடலை மெருகேற்றி பார்ப்பதற்கு ஃபிட்டான லுக்கில் இருக்கிறார். இந்நிலையில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ் இதுவரை தனது அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கி வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்றும், இனிமேல் யாரும் எனது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில், அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்.
இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். இப்போது, நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன், இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். மேலும் எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்திருக்கும் அவர், அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் என்று நன்றியையும் தெரிவித்துள்ளார்.