"என் அறக்கட்டளைக்கு இனி யாரும் நன்கொடை வழங்க வேண்டாம்!"- ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்! காரணம் என்ன?

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது (Larencce Charitable Trust) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

‘ருத்ரன்’, ‘சந்திரமுகி 2’, ‘அதிகாரம்’, ‘துர்கா’ உட்படப் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் பி.வாசுவின் இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’வில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு மைசூரில் ஒரு ஷெட்யூல் முடிந்திருக்கிறது. இந்நிலையில் அவர் தற்போது ஒரு வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸ்

இது குறித்து ராகவா லாரன்ஸ் தெரிவித்திருப்பதாவது…

“இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன்.

இப்போது ​​நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறேன். இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, என் அறக்கட்டளைக்கு இனி உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வடிவேலுவுடன் ராகவா லாரன்ஸ்

இரண்டாவதாக, இப்போது நான் நடித்து வரும் ‘சந்திரமுகி 2’ படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும். உங்கள் ஆசீர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.