அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு முறை சோதனைகளை நடத்திய போதும் மீண்டும் ஒரு சோதனை நடைபெறும் என்று சமயம் தமிழில் இரு வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய 11 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற தலா ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய மாநில அரசுகள் இணைந்து இதை முன்னெடுத்தன. இதில் பெரியளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முழு ரிப்போர்ட்டை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரோடு நெருக்கம் பாராட்டிய அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என பெரிய பட்டியல் இடம்பெற்றுள்ளதாக வும் இது தொடர்பாக தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் “எஸ்.பி.வேலுமணிக்கு வச்ச குறி: ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கோவையில் கச்சேரி!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
முதல்வரின் கொங்கு பயணம் முடிந்த பின்னர் கோவையில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
முதல்வரின் கொங்கு பயணம் முடிந்த இரு வாரங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
முக்கியமாக வேலுமணியின் வலது கரமாக அறியப்படும் வடவள்ளி சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் வருமான வரித்துறை வடவள்ளி சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்றைய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் பல கேள்விகளுக்கு இன்று விடை கிடைக்கும் என காவல்துறை எதிர்பார்க்கின்றனர்.