சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரூ.32.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின்போது, கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கான இடங்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (13ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் ரூ.32.08 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்கம், 348 கிராம் வெள்ளி மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்கள், வழக்கில் தொடர்புடைய 315 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.18.37 லட்சம் பணம், 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டது. மேலும், வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐபோன்கள், 4 வங்கிப் பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மஞ்சக்கரனை பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு மாறாக சான்றிதழ் வழங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.