புதுடெல்லி: ‘நோய் பரவலின் வீரியத்தை ஒன்றிய அரசு ஆரம்பத்திலேயே கணித்து இருந்தால், கொரோனா 2ம் அலையில் ஏற்பட்ட உயிர் பலிகளை தடுத்து இருக்கலாம்,’ என்று நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளது. நாட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா 2ம் அலையில், உயிர் பலி அதிகளவில் ஏற்பட்டது. இந்நிலையில், சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 137வது அறிக்கையை மாநிலங்களவையில் நேற்று முன்தினம் சமர்பித்தது. இந்த அறிக்கையில் அது கூறியிருப்பதாவது: கொரோனா 2ம் அலையின்போது உயிர் இழப்புகள் அதிகமாக ஏற்பட்டன.
ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காதது, மருந்துகள் பற்றாக்குறை, தீவிர சிகிச்சைக்கான முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு, அத்தியாவசிய சுகாதார சேவையில் பாதிப்பு, ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்கப்பட்டது போன்றவை, 2ம் அலையில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளுக்கு காரணம். கொரோனாவின் பல்வேறு வீரியமிக்க உருமாற்ற வைரஸ்கள் மக்களிடையே பரவி இருப்பதை ஒன்றிய அரசு கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியத்தை முன்கூட்டியே கணித்து இருந்தால், பெரியளவில் உயிர் இழப்புகள் ஏற்பட்டதை தடுத்திருக்க முடியும். ஏராளமான உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.
மேலும், 2வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, தங்கள் மாநிலங்களில் ஆக்சிஜன்் பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை என்று 20 மாநிலங்கள் தெரிவித்தன. ஒன்றிய சுகாதார அமைச்சகமும் துரதிருஷ்டவசமாக இதே போல் மறுப்பு தெரிவித்ததில் நிலைக்குழு கலக்கம் அடைந்துள்ளது. எனவே, 2வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தணிக்கை செய்ய வேண்டும். இதை வெளிப்படையாக தணிக்கை செய்து, இறந்தவர்களின் குடும்பஙக்ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.