அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை, எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்திற்கான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்து, அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதனடிப்படையில், கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் வேலுமணிக்கு தொடர்புடைய 10 இடங்கள், கோவையில் தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 9 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடக்கிறது.
இதையறிந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான தாமோதரன், அம்மன் அர்ஜுனன், பிஆர்ஜி அருண்குமார், கேஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி, விபி கந்தசாமி, ஏகே செல்வராஜ் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், வேலுமணி வீட்டின் முன்பு குவிந்து சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களை அங்கிருந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர், ஆனால் அவர்கள் எதையும் கேட்கவில்லை. இதனால் போலீஸாருக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நிலவியது.
பிறகு அதிமுக எம்எல்ஏக்கள், உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
அப்போது பேசிய கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் ஏற்கனவே 2 முறை சோதனை நடந்த நிலையில், 3வது முறையாக வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. இந்த முறையும் எதுவும் கிடைக்காது. மின் கட்டண உயர்வை, திசைதிருப்பவே, திமுக அரசு திட்டமிட்டு இந்த சோதனையை நடத்துகிறது. ஒரு வேலுமணியை முடக்கினால், அவர் 100 வேலுமணியை உருவாக்குவார் என்று பேசினார்.
இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“