கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட மேட்டு காலனி கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் நேற்றுமுன்தினம் மாலை 7ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டிய 72 பக்தர்கள் வேப்பிலை அணிந்து, நாக்கில் வேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பக்தராக தீக்குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் மேட்டு காலனி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
இதில் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாறன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கன்னிகா பரமேஸ்வரி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வாணவேடிக்கை, அதிரடி மேளம், தெரு கூத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியை மேட்டு காலனி கன்னிகா பரமேஸ்வரி ஆலய நிர்வாகியும் சமூக சேவகருமான வேலாயுதம் உள்பட ஊர்மக்கள் சிறப்பாக நடத்தினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தை சேர்ந்த ஜெய்பிரகாஷ், நாராயணன், ரவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.