சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.111.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது, திராவிட மாடல் அரசு கம்பீரமாக கடமையாற்ற பொதுமக்கள் என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கவுதமபுரம் திட்டப் பகுதியில் ரூ.111.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
மேலும், ரூ.1 கோடியே 95 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள், நூலகக் கட்டிடம் மற்றும் பூங்கா அமைப்பதற்கான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.1 கோடியே 94 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கொளத்தூர் ஜவஹர் நகரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில், கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 89 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை முதல்வர் வழங்கினார்.
கவுதமபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு. அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை. அதுவும், கொளத்தூர் தொகுதியில் மிக முக்கியமான பகுதி, இந்த கவுதமபுரம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும், இந்த பகுதியை பார்வையிட்டேன். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தேன். உடனடியாக பழுது பார்ப்பதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தை ஒதுக்கினேன். அதன்பின் பல்வேறு நிதிகள் பெற்று பணிகள் நடைபெற்றது.
400 வீடுகள் இருந்த கவுதமபுரத்தில், பழைய வீடுகள் எல்லாம் அகற்றப்பட்டு, தற்போது 840 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. குடிசையை மாற்றி கட்டிடம் கட்டுவது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. இந்த நகர்ப்புற மக்களது வாழ்க்கையும், வாழ்விடமும், வாழ்க்கை தரமும் மேம்பட வேண்டும் என்று நினைக்கும் அரசுதான் திமுக அரசு. அதைத்தான் திராவிட மாடல் அரசு என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
சில மாநிலங்களில் ஏதாவது ஒரு பெரிய விழா நடந்தால், வெளிநாட்டில் இருந்து தலைவரை அழைத்து வருகின்றனர். அவர்கள் சில மாநிலங்களில் சுற்றிப் பார்க்கும்போது, அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் குடிசைப் பகுதிகளை தார்ப்பாய் போட்டு மறைத்துள்ளனர். ஆனால், நம் மாடல் என்பது மறைக்கும் மாடல் அல்ல; திராவிட மாடல். அதன் அடையாளம்தான் இந்த குடியிருப்பு.
இந்த ஆட்சியில், 219 இடங்களில் ரூ.10,295 கோடி மதிப்பீட்டில் 94,557 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
உழைப்பு என்பது எனக்கு மட்டுமல்ல. என்னுடன் இணைந்து பணியாற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் என எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அந்த பொறுப்பை உணர்ந்து பணியாற்றுகின்றனர். அதுதான் திராவிட மாடல் அரசு. அப்படிப்பட்ட திராவிட மாடல் அரசு இன்றைக்கு கம்பீரமாக தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் ஹித்தேஸ்குமார் எஸ்.மக்வானா, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ம.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.