கோயில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமோ, பேச்சுக்களோ இருக்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 3 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இவ்வாறு உத்தரவு பிறப்பித்து மூன்று நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் கோவில் திருவிழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பழைய பள்ளிபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
இதனை அடுத்து கோயில் கமிட்டி சார்பில் ஆர்கெஸ்ட்ரா மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரைப்பட நடிகை அஷ்மிதா கலந்து கொண்டு பாடல்களுக்கு நடனம் ஆடினார். இதில் பல பாடல்கள் அரைகுறை ஆடையுடன் மிக கவர்ச்சியாக இருந்ததால் பார்ப்போர் முகம் சுளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதிலும், பிரபல ஐடம் பாடல்களான “கட்டிப்புடி கட்டிப்புடிடா, கண்ணா என் சேலைக்குள்ளே…” உள்ளிட்ட பாடல்களுக்கும் ரசிக்க தகாத நடன அசைவுகளுடன் கலைஞர்கள் ஆடியிருப்பது மிகவும் அதிர்ச்சியளித்துள்ளது.
இதனையறிந்து காவல்துறையினர் கலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் எச்சரித்தும் இந்த கலை நிகழ்ச்சி தற்போது நிகழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கலை நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நேரலை செய்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் இந்த நிகழ்ச்சி வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலதரப்பட்ட இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.