ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டுக்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 65வது நினைவு நாள் நேற்று அனுசகரிக்கப்பட்டது. இதனையொட்டி பரமக்குடியில் இருக்கும் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், ஊர் பொதுமக்கள் என அலைஅலையாக வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து இமானுவேல் சேகரனின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.
பாஜக சார்பில் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளா் பொன்.பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளா் அஸ்வத்தாமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தான் முகம் சுழிக்க வைக்கும் சம்பவமும் அரங்கேறியது. கூட்டம் அலைமோதியதால், அந்த இடத்தில் நெரிசலாக இருந்தது. இந்தக் கூட்டத்துக்கு நடுவே முன்னாள் எம்பியும், பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்கு பின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதியும் வந்தார். அப்போது, அவர் அஞ்சலி செலுத்துவதில் கவனம் செலுத்தாமல், தங்கள் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பாவை சங்கடத்துக்குள்ளாக்குவதிலேய குறியாக இருந்தார்.
தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தப்போன இடத்தில் முன்னாள் எம்பியும், தமிழக #பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவிடம், மாநிலபொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தகாதமுறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் முகம் சுழிக்க வைத்துள்ளது.@annamalai_k @khushsundar @rajakumaari pic.twitter.com/r72NOFBirn
— Sathish (@SathishPT123) September 13, 2022
பொதுவெளியில் கூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் தியாகிக்கு அஞ்சலி செலுத்தாமல், சித்துவிளையாட்டை அரங்கேற்றுவதற்காக அங்கும் இங்கும் வேண்டும் என்றே நகர்வதுபோல் நடித்துக் கொண்டிருந்தார். இதனால், சங்கடம் ஏற்பட்டாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார் சசிகலா புஷ்பா. பொன்.பாலகணபதியின் முகம் சுழிக்க வைக்கும் இந்த செயலை வீடியோவாக பதிவு செய்த சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதனைப் பார்த்த பலரும் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.