கரூரில் சட்டவிரோதமாக நடைபெறும் கல்குவாரிகளை மூட கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மக்கள் நீதிமையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் குவாரி கும்பலால் அவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். ஜெகநாதன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இயற்கை வளங்களைச் சூறையாடுதல், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது.
கரூர், கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அனுமதி இல்லாமலும்,அளவுக்கு அதிகமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்தி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.