பரேலி: உத்தரபிரதேசத்தில் சூரியஒளி மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் செய்த போது, அது வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை பலியானது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சுனில் குமார் காஷ்யப் – குசும் காஷ்யப் தம்பதிக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இவர்கள், மின் இணைப்பு இல்லாத தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்தனர். சூரியஔி சோலார் தகடு மூலம் மின்சார உற்பத்தி செய்து, அதனை பயன்படுத்தி வந்தனர். சுனில் குமார் காஷ்யப் வழக்கம் போல் தனது செல்போனுக்கு சார்ஜ் செய்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வாங்கப்பட்ட அந்த செல்போனின் பேட்டரி வீங்கிய நிலையில் இருந்தது.
சார்ஜ் போட்டபோது அந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது வெடித்த பேட்டரி பட்டதில், பலத்த காயத்துடன் அந்த குழந்தை மயக்கமடைந்தது. அதையடுத்து பெற்றோர் தங்களது குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதுவரை யாரும் போலீசில் புகார் செய்யாத நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.