தமிழ்நாடு அரசியலில் தற்போது கரூர் மாவட்டம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. காரணம் அமைச்சரவையில் முக்கியத்துவம் பெற்றுள்ள செந்தில் பாலாஜி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.பியாக பார்க்கப்படும் ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என முக்கிய அரசியல் தலைவர்களை கொண்ட ஒரு மாவட்டம்.
மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரை எப்போதும் தனது கட்டுக்குள் வைத்திருப்பார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது
ஆட்சியில் அமைச்சராக உள்ளபோதும் சரி கரூர் அரசியல் அவரை சுற்றியே இருக்கும்.
திமுகவில் இணைந்ததும் மு.க.ஸ்டாலின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறியுள்ள செந்தில் பாலாஜிக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதில் ஒன்று தான் கொங்கு மண்டலத்தில் திமுக வளர்ச்சி. அதனை அவர் செவ்வனே செய்தும் வருகிறார். அதற்கு சான்று தான் கடந்த மாதம் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் 55,000 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது.
ஸ்ரீ கரிய காளியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
இப்படி பம்பரமாக சுழன்று வரும் செந்தில் பாலாஜி சென்னை, கரூர், கோவை என வாரத்தின் 7 நாட்களும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால், கோவை மீது கூடுதல் கவனம் செலுத்திய அவர், அண்மை காலமாக கரூரை கவனிக்காமல் விட்டுவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.
அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக களத்தில் இறங்கி தீவிரமாக அரசியல் செய்து வருகிறது. அதன் வெளிபாடு தான் செந்தில் பாலாஜி பெயர் அடிப்பட்ட இடத்தில் தற்போது பாஜகவின் செந்தில்நாதன் பெயர் அடிப்படத் தொடங்கியுள்ளது.
அதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கியமாக கரூரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக உள்ள அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்ய பாஜக முயல்கிறது. அதனால் தான் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதிகள் என என கரூர் நகரத்தை விட்டு வெளியில் சென்று கிராமப்புறங்களை குறிவைத்து பாஜக அரசியல் காய்களை நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ள செந்தில் பாலாஜி வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே கரூரில் தங்கி முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனால், பிற பகுதிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என திமுகவினர் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணிக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் செந்தில் பாலாஜி கலக்கமடைந்துள்ளதாகவும் அதன் வெளிபாடே கடந்த 4 நாட்களாக கரூரிலேயே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பதவியை ராஜினாமா செய்யக்கோரி செந்தில் பாலாஜிக்கு எதிராக கரூர் மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம், போஸ்டர் என மக்களை உற்றுநோக்கும் வகையில் அரசியல் செய்து வருவதால கோவையில் கொடி நாட்டிவிட்டு கரூரை கைவிட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவின் இந்த செயல்பாடு திமுக நிர்வாகிகள் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதிமுகவில் இருந்தபோது செந்தில் பாலாஜி, செந்தில்நாதன் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.