அகமதாபாத்: விரைவில் குஜராத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்னும் 2 மாசம் தான், அதற்குள் ஆட்சிக்கு வந்துடுவோம் என்றும் பாஜக தவறுகளுக்கு துணைபோகாதீங்க என்றும் போலீசாருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அட்வைஸ் செய்து ட்விட் வெளியிட்டுள்ளார் .
குஜராத் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. பஞ்சாப்பில் ஆட்சி அமைத்த உற்சாகத்துடன் குஜராத் பக்கமும் தனது கவனத்தை கெஜ்ரிவால் திருப்பியிருக்கிறார்.
குஜராத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி அரியணையில் இருக்கும் பாஜகவை வீழ்த்த அனல் பறக்கும் பிரசாரங்களை தற்போதே கெஜ்ரிவால் தொடங்கிவிட்டார்.
குஜராத்தில் கெஜ்ரிவால்
இதனால், குஜராத் சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரசாரம் மேற்கொண்டர். இன்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார்.

ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு
முன்னதாக நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ டிரைவர் ஒருவர் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு இரவு உணவு அருந்துவதற்காக ஆட்டோவில் சென்றார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கெஜ்ரிவாலை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருடன் கெஜ்ரிவால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஆட்டோவில் செல்வதற்கு கெஜ்ரிவால் அனுமதிக்கப்பட்டார்.

கெஜ்ரிவால் ட்விட்
முன்னதாக 2 நாள் பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்றிருந்த போது அகமதாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், போலிசார் சோதனை மேற்கொண்டதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், அப்படி ஒரு சோதனை நடத்தவில்லை என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு பதில் அளிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டு இருப்பதாவது:-

ஆம் ஆத்மி தான் வரப்போகிறது
”குஜராத் போலீசாருக்கு எனது கோரிக்கை என்னவென்றால், கிரேட் பே மற்றும் பல விவகாரங்களில் உங்களுக்கு ஆதரவாக நான் இருந்துள்ளேன். ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததும் இதையெல்லாம் அமல்படுத்துவோம். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். இரண்டு மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தவறான செயல்களை செய்யுமாறு பாஜகவினர் வலியுறுத்தினால்.. அதை கேட்காதீர்கள்… பாஜக வெளியேறும் பாதையில் உள்ளது. ஆம் ஆத்மி தான் வரப்போகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக பதிலடி
முன்னதாக நேற்று அகமதாபாத்தில் போலீசாருடன் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து பதிலடி கொடுத்த பாஜக, ”குஜராத் பயணத்தின் போது கெஜ்ரிவால் மீது வன்முறை தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் அவருக்குச் சிறப்புப் பாதுகாப்பு கோரி ஆம் ஆத்மி கட்சியினர் தான் கடிதம் கொடுத்து இருந்தனர். தற்போது இந்த டிராமாவில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்து இருந்தது.