சென்னை: கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றினால் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, வானகரம், ராஜாங்குப்பம் பகுதியிலுள்ள அவந்திகா மருந்தகத்தை ஒட்டியுள்ள வளாகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கூவம் ஆற்றில் வெளியேற்றுவது குறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கூவம் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு அந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரிய வந்தது. மேலும் வடக்கு பக்க சுற்றுச்சுவரில் கூவம் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்ற படிக்கட்டுகளுடன் கூடிய திறப்பு இருப்பதும், டேங்கர் லாரியில் இருந்து கழிவுநீரை கூவம் ஆற்றில் விடுவதற்காக குழாய்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, மோட்டார் வாகனச் சட்டம், 1988 ன் படி, TN 05 D 9410, TN 02Y 2131, TN 20 Y 2777, TN 30 Y 2585 , TN01 YP 4311, TN 54 D 9167, TN 01 AV 5828, TN 01 J 5900 மற்றும் TN 07 AZ 7615 ஆகிய பதிவு எண்கள் கொண்ட 9 டேங்கர் லாரிகளின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்யுமாறு கடந்த 9ம் தேதி போக்குவரத்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், டேங்கர் லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆறுகளில் வெளியேற்றுவதை தடுக்கும் வகையில், டேங்கர் லாரிகளின் ரத்து செய்யப்பட்ட பதிவுச் சான்றிதழ்கள் குறித்த விவரங்களை தினசரி நாளிதழ்களில் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) மூலம் பரவலாக விளம்பரப்படுத்தவும் வாரியம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 இன் பிரிவு 33A இன் கீழ் எண்.1/34 கண்ணபிரான் தெரு, நூம்பல், சென்னை என்ற விலாசத்தில் இயங்கி வரும் நடேசன் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை மூடுவதற்கும், மின் இணைப்பைத் துண்டிப்பதற்கும் வாரியம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், அவ்வளாகத்தை சீல் வைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி இந்த வளாகத்தின் மின் இணைப்பு மின்வாரியத்தால் துண்டிக்கப்பட்டது. மேலும் இன்று (13ம் தேதி) வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
எனவே கழிவுநீர் டேங்கர் லாரிகளை கையாளுபவர்கள் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களிலிருந்து சேகரிக்கும் கழிவுநீரை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்ற வேண்டும் என்றும், சட்ட விரோதமாக நீர் நிலைகள் மற்றும் காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.