மதுரை: “முழுமையாக தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயர் விளையாட்டை எப்படி தொடர்ந்து விளையாட முடிகிறது? போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகள் இதாஸ் செலானி வில்சன் (19). நாகர்கோவில் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்தார். அவரை செப்.6 முதல் காணவில்லை. விசாரித்த போது என் மகள் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஃபிரீ ஃபயர் விளையாடி வந்ததாகவும், அப்போது அவருக்கு கன்னியாகுமரி சவேரியார்புரம் சுனாமி காலனியைச் ஜெப்ரின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
ஜெப்ரின் வீட்டிற்கு சென்று பார்த்து போது அவரையும் காணவில்லை. ஜெப்ரின் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர். அவர் ஆசை வார்த்தைகளை கூறி என் மகளை கடத்தியிருக்கலாம். என் மகளை கண்டுபிடிக்கக் கோரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் மகளை இதுவரை கண்டுபிடிக்க நடவடிக்கை இல்லை. என் மகளை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ப்ரீ ஃபயர் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில், இளைஞர்கள் அதை எப்படி விளையாடுகிறார்கள்? காவல் துறை குறிப்பாக சைபர் க்ரைம் போலீஸார் என்ன செய்கிறார்கள்? இதை தடுக்காவிட்டால் இளம் தலைமுறையினர் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.