திருப்பாசேத்தி கோயில் காளை உயிரிழப்பு: லீவ் போட்டு காளையை நல்லடக்கம் செய்த கிராம மக்கள்!

திருப்பாசேத்தி அருகே கோயில் காளை உயிரிழந்ததால், அந்த கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது காணுர் கிராமம். சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கும் இக்கிராமத்தில் அமைந்துள்ளது சமய கருப்பர் சுவாமி திருக்கோயில். ஊர் மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் போற்றப்படும் இத்திருக்கோயிலில், கடந்த 2009 ஆண்டு முதல் கோயில் காளையொன்று வளர்க்கப்பட்டது. நாட்டு இனத்தை சேர்ந்த இக்கோயில் காளை, பல்வேறு மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. ஊர் மக்களின் செல்லப் பிராணியாக போற்றப்படும் இக்கோயில் காளை, இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
image
இதனை அறிந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். காளைக்கு மரியாதை செலுத்தும்விதமாக, பணி நிமித்தமாக வெளியூர் செல்பவர்கள் உட்பட அனைவரும் விடுமுறை எடுத்து, காளையின் உடலை மந்தையில் வைத்து மேளதாளம் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் மாலை, வேஷ்டி அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாலையில் டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட அது, கோயிலின் எதிரே அடக்கம் செய்யப்பட உள்ளது. விவசாயிகளின் தோழனாக வளர்க்கப்படும் நாட்டு இன மாடுகளை அதிகரிக்க கோயில் காளை பாரம்பரியமாக கிராமம் தோறும் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், கிராமத்தின் செல்லப்பிராணியாகவும், வீரத்தின் அடையாளமாகவும் போற்றப்பட்ட கோயில் காளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.