தென்மாவட்டங்கள் வழியாக வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இயக்கப்படுமா?.. பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: தென்மாவட்டங்கள் வழியாக திருவிழாவை ஒட்டி இயக்கப்பட்ட வேளாங்கண்ணி எக்ஸ்பிரசை தொடர்ந்து இயக்கிட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு வாராந்திர ரயிலை ரயில்வேத்துறை அறிவித்து இயக்கியது.

இந்த ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை வேளாங்கண்ணி சென்றது. மறுமார்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் சென்றடையுமாறு இயக்கப்பட்டது. இந்த ரயில் மொத்தம் நான்கு சேவைகள் மட்டும் அதாவது ஆகஸ்ட் மாதம் 17, 24, செப்டம்பர் 3, 7 ஆகிய நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பை பொறுத்து இந்த ரயிலின் சேவை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யாமல் கடந்த செப்டம்பர் 7ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனால் கேரளா பயணிகள் பயன்படும்படியாக எர்ணாகுளத்திலிருந்து கோட்டயம், கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் கால அட்டவணை வெகுநேர்த்தியாக அமைக்கப்பட்டு கேரளாவுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டு, ரயில் சேவை நவம்பர் மாதம் முடியும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நெல்லை, குமரி மாவட்டம் வழியாக இயக்கப்பட்ட சிறப்பு ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் கூட தொடர்ந்து இயக்கப்படவில்லை. நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ரயிலில் செல்ல போதிய ரயில்கள் இல்லை. இதனால் பயணிகள் தற்போது திருச்சி சென்று விட்டு அங்கிருந்து அடுத்த ரயிலில் பயணிக்கின்றனர். நெல்லையில் இருந்து தஞ்சாவூருக்கு தற்போது நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா தினசரி ரயில், செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி- புதுச்சேரி வாராந்திர ரயில் மட்டுமே உள்ளது.

அதிலும் தினசரி இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இடம் கிடைக்க 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியதுள்ளது. இந்த ரயில்கள் நடு இரவு நேரங்களில்தான் தஞ்சாவூர் பயணம் செய்கிறது. தஞ்சாவூரில் இருந்து அடுத்து பயணம் செய்ய எந்த ஒரு இணைப்பு ரயில் வசதியும் இல்லை. எனவே நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில் திருவனந்தபுரம் அல்லது கொச்சுவேலியிருந்து நாகர்கோவில், நெல்லை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும். இந்த ரயில் திருச்சிக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லுமாறு காலஅட்டவணை அமைக்கப்பட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.