தெலங்கானா: எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் இருந்து பரவிய தீ… சென்னையை சேர்ந்தவர் உட்பட 8 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூபி பிரைட் என்ற சொகுசு ஹோட்டலின் தரைத் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு கட்டடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள இ-பைக் ஷோரூமில் இரவு 9.20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்கள் காந்தி மருத்துவமனை மற்றும் யசோதா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹோட்டலில் 23 அறைகள் இருக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டபோது தோராயமாக 50 சதவிகித அறைகளில் ஆட்கள் இருந்திருக்கின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த், “ரூபி மோட்டார்ஸ் ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த இ-பைக் அல்லது ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீ படிக்கட்டுகள் வழியே பரவி பாதாள அறை, தரை, கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களைச் சூழ்ந்திருக்கிறது. தீயை விட, புகை தான் உள்ளிருந்தவர்களைத் திணறடித்திருக்கிறது. உடனே, தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். சில மணி நேரங்களுக்குப் பிறகே அடர்ந்த புகை வெளியேறியது. அருகிலிருந்த சில உள்ளூர் மக்களும் சேர்ந்து ஹோட்டலின் உள்ளே இருந்தவர்களை மீட்க உதவினார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தீ விபத்து

அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கு உண்மையில் என்ன காரணம் என்பது விசாரணையில் தெரியவரும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் டெல்லி, சென்னை மற்றும் விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, “தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் உயிர் இழந்த தகவல் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.” எனத் தெரிவித்திருக்கிறார்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.