தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் செப்டம்பர் 12ஆம் தேதி, திங்கட்கிழமை பின்னிரவில் ஏற்பட்ட ஒரு பெரும் தீயால் குறைந்தது எட்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த விடுதி அமைந்துள்ள அதே கட்டடத்தின் முதல் தளத்தில் இருக்கும் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டடம் முழுவதும் பரவியது என்று காவல்துறை தெரிவிக்கிறது.

திங்கட்கிழமை இரவு சுமார் 10 மணியாளவில் செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகத்தின் அருகே இருக்கும் ரூபி லாட்ஜிங் என்னும் அந்த கட்டடத்தில் தீ உண்டானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ பற்றியதற்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. மின் கசிவு அல்லது எலக்ட்ரிக் பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டதால் தீ உண்டாகி இருக்கலாம் என்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
”தீயை விட புகைதான் அதிகமாக இருந்தது; வெள்ளை புகை விடுதி அறைகள் மற்றும் நடைபாதை ஆகியவற்றில் பரவியது,” என்று மீட்பு நடவடிக்கைகளில் காவல்துறைக்கு உதவி உள்ளூர்வாசி ஒருவர் குறிப்பிட்டார்.
அந்த விடுதியில் தீ உண்டான பொழுது குறைந்தது 23 பேர் தங்கி இருந்தனர்.
- இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்- எப்படி தடுக்கலாம்- – BBC News தமிழ்
- அணில் ஏறினால் உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து விடுமா?
- இ-ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடிக்க காரணம் என்ன? எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எதிர்காலம் உள்ளதா?
விடுதியின் நடைபாதைகளில் நடக்க முடியாதபடி புகை மறைத்ததுடன் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமத்தையும் கடுமையான புகை உண்டாக்கியது என காவல்துறை தெரிவிக்கிறது.
தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிலர் கட்டடத்தில் இருந்து கீழே குதித்த நிகழ்வும் பதிவாகியுள்ளது.
கட்டடத்தில் மேலே சிக்கிக் கொண்டவர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் கிரேன்களை பயன்படுத்தினர்.
”பெரும்பாலானவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்த தொழில் துறையினர்; கொல்லப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடக்கம்,” என ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் சி.வி. ஆனந்த் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.
தற்பொழுது இந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்