திருமலை: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டதால் அதில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். ஆனால், ஷோரூம் செயல்பட்டு வந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள ரூபி லாட்ஜில் பலர் தங்கி இருந்தனர். இதனால் அதில் இருந்தவர்கள் தீயில் சிக்கி கொண்டனர்.
அதில் சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜன்னல் வழியாக குதித்தனர், சிலரை தீயணைப்பு வீரர்கள் ஹைட்ராலிக் ஏணி முலம் கிழே கொண்டு வந்தனர். இருப்பினும் ஏழு பேர் தீயில் சிக்கி உயிருடன் எரிந்தனர். மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓட்டலில் சிக்கியிருந்த பலரை மீட்டனர். காயமடைந்தவர்கள் ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மறுபுறம், தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், எட்டு தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீயை கட்டுப்படுத்தினர். ஹைதராபாத் காவல் ஆணையர் சிவி ஆனந்த், மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கேட்டறிந்தனர். விபத்து நடந்த போது லாட்ஜில் 25 பேர் இருந்தது தெரிய வந்துள்ளதால் லாட்ஜில் இருந்தவர்களை அனைவரும் மீட்கப்பட்டனரா என போலீசார் தீயை கட்டுபடுத்திய பின்னர் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் எலக்ட்ரிக் பைக் வாகனத்தில் இருந்த பேட்டரியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.