தமிழ் திரையுலகில் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ராகாவா லாரன்ஸ். இவரின், ‘முனி’ வரிசை திரைப்படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர். தற்போது, புகழ்பெற்ற ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியிருந்தது. சந்திரமுகி முதல் பாகத்தை எடுத்த பி.வாசு தான் இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தைப் போன்று இதிலும் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கிறார். சந்திரமுகி இரண்டாம் பாகம் திரைப்படத்திற்காக ராகவா லாரன்ஸ் தனது உடலை மெறுகேற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து, தான் கட்டுடலுடன் காட்சியளிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
திரைப்படங்களை தவிர்த்து ராகவா லாரன்ஸ், தன்னை எப்போதும் ஓர் ஆன்மீகவாதியாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராகவும் அடையாளப்படுத்திக்கொள்வார். அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவாற்றவர்கள் ஆகியோரின் நலன் சார்ந்தும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.