திருவனந்தபுரம்: நம் நாடு எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதில் காங்கிரசுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று திருவனந்தபுரத்தில் நடைபயணத்தின் போது தன்னை சந்திக்க வந்த கலாச்சார மற்றும் மத தலைவர்களிடையே பேசும் போது ராகுல் காந்தி குறிப்பிட்டார். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி. தொடர்ந்து 4 நாட்கள் நடை பயணத்தை நிறைவு செய்தவர் தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கேரளாவில் 2 வது நாள் நடைபயணத்தை நேற்று திருவனந்தபுரம் நகர எல்லையில் உள்ள கழக்கூட்டத்தில் நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் கழக்கூட்டத்தில் இருந்து திரளான காங்கிரஸ் தொண்டர்களுடன் 3வது நாள் நடைபயணத்தை தொடங்கினார். அதன்படி காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மாவட்ட எல்லையில் உள்ள ஆற்றிங்கலில் நிறைவு செய்தார். வழிநெடுகிலும், சாலை ஓரங்களில் திரண்டிருந்த ஏராளமானோர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடை பயணத்தின் இடையே திருவனந்தபுரத்தில் கலாச்சார மற்றும் மத தலைவர்களை சந்தித்து பேசினார்.
மலங்கரை கத்தோலிக்க பிஷப் கார்டினல் பசேலியோஸ் மார் கிளிம்மிஸ், சாந்திகிரி ஆசிரம பொது செயலாளர் குரு ரத்தினம் ஞான தபஸ்வி, திருவனந்தபுரம் பாளையம் பள்ளிவாசல் இமாம் சுகைப் மௌலவி, லத்தீன் கத்தோலிக்க சபை பிஷப் தாமஸ் ஜே நெட்டோ, பழம்பெரும் மலையாள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி கூறியது: சமீப காலமாக நம் நாடு மிகப் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வும், வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்துவிட்டது. படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
தற்போது நம் நாடு எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் கூறியது: நம் நாட்டில் இப்போது கருத்து சுதந்திரம் பறிபோய் விட்டது. கலைஞர்களால் கூட சுதந்திரமாக எந்தக் கருத்தையும் கூற முடியாத நிலை இருக்கிறது. இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் காங்கிரஸ் மீண்டும் வலிமையுடன் திரும்பி வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.