நோய் பரப்பும் மருத்துவமனை ஐசியூ-க்கள்; அலட்சியத்தால் காத்திருக்கும் ஆபத்து – ஆய்வு சொல்வதென்ன?

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அலட்சியம் காரணமாக மருத்துவமனை ஐசியூ-க்கள், தொற்றை பரப்பும் மையங்களாக விளங்குவது தெரியவந்துள்ளது.

மத்திய அரசு, எய்ம்ஸ் எனப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மையம் (CDC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் மருத்துவமனை தொற்று கண்காணிப்பு வாரியம் (HAI Surveillance India), நாடு முழுவதும் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவு எனப்படும் ஐ.சி.யூ-க்களில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.

Treatment (Representational Image)

இந்த ஆய்வில், Super Bugs அல்லது Antimicrobial / Antibiotic Resistant Micro Organisms என்று அழைக்கப்படும் மருந்து எதிர்ப்பு நுண்ணுயிரிகளின் பரவல், மிக அதிகமாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 39 மருத்துவ மையங்களில், 120 தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட, 3080 ரத்த மாதிரிகளிலும், 792 சிறுநீர் மாதிரிகளிலும் இருந்து இது தெரியவந்துள்ளது.

இதில் கவலைதரக்கூடிய அம்சம் என்னவென்றால், இவ்வகை கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களில், 38.1% பேர் ரத்த ஓட்டத் தொற்றாலும், 27.9% பேர் சிறுநீர்ப்பாதை நோய் தொற்றாலும் அனுமதிக்கப்பட்ட 14 நாள்களில் இறந்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவுகள், மருத்துவமனை நோய்த்தொற்றுகளுக்கான பெருமையங்களாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி டாக்டர் காமினி வாலியா தெரிவித்தார். இந்த ஆய்வு முடிவுகள், மருத்துவமனைகளில் தகுந்த கட்டுப்பாட்டு நெறிமுறைகளின் அவசியத்தையும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் சரியான உபயோகத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

Surgery (Representational Image)

நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் முறையற்ற விதத்திலும், அதிகளவிலும் பயன்படுத்தப்படுவது, இத்தகைய சிக்கல்கள் உருவாவதற்கு காரணிகளாக அமைகின்றன. தகுதிவாய்ந்த மருத்துவ வல்லுநர்களின் வழிகாட்டுதல்களின்றி, தனிநபர்கள் தாமாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதனால் இப்பிரச்னை மேலும் மோசமடைகிறது. இந்திய மருத்துவமனை தொற்று கண்காணிப்பு வாரியத்தின் இந்த ஆய்வு முடிவானது, நாடு முழுவதும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளை மட்டுமே கணக்கில்கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.