வேலூர், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்றைய தினம் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கி, தன்னுடைய பள்ளி அனுபவங்கள் பற்றி மலரும் நினைவுகளைப்போல மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பவர் கட் ஆனதால் ‘அப்செட்’ ஆன துரைமுருகன், மைக்கை தட்டி தட்டிப் பார்த்தார். அருகிலிருந்தவர்கள் ‘கரன்ட் கட் ஐயா’ என்று சொன்னதால், பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டார்.
உடனே, அருகில் அமர்ந்துகொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் இருவரும் பதறிப்போய் மின்வாரிய அதிகாரிகளை போனில் அழைத்து சத்தம் போட்டனர். ‘கரன்ட் வந்துவிடும்’ எனச் சொல்லி சொல்லியே 10 நிமிடங்களுக்கு மேல் ஆனது. ஆனாலும், கரன்ட் வரவில்லை. இதனால் கடுப்படைந்த துரைமுருகன் நிகழ்ச்சி முடியாமலயே மேடையிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, மின்வெட்டு ஏற்பட்ட விவகாரத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக்கூறி மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் ரவிகிரண் மற்றும் சிட்டிபாபு இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால், மின்வாரியத்தினர் ‘ஷாக்’ அடித்ததைப்போல அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் செல்லும் நிகழ்ச்சிகளில் மின்வெட்டு ஏற்படாதவாறு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.
இதனிடையே, இன்று காலை காட்பாடி தொகுதிக்குஉட்பட்ட பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிவிட்டு துரைமுருகன் பேசத் தொடங்கினார். அந்த சமயம் பார்த்து, அருகிலிருந்த கோயிலில் இருந்து மணியோசையும் அர்ச்சனையும் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால், மீண்டும் அப்செட் ஆன துரைமுருகன், ‘‘நான் பேசும்போது மட்டும்தான் இப்படியெல்லாம் இடையூறுகள் ஏற்படுமா?’’ என தனக்கே உரிய நையாண்டி தொரணையில் சிறிய வருத்தத்தை வெளிப்படுத்தினார்.