'பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் சோனியா தான்… காங்கிரஸின் கதை முடிந்தது' – கெஜ்ரிவால் தாக்கு

மக்களவை தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் நடைபெற இருக்கும் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் தேசிய அளவில் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியிலும், ராஜஸ்தானில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. 

இதில், குஜராத்தை பாஜகவும், ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சியும் தக்கவைத்துக்கொள்ள இப்போது இருந்த வேலைகளை தொடங்கிவிட்டன. பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை தவிர்த்து இந்த தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியும் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. இரண்டு கட்சிகளுக்கு தாங்கள்தான் மாற்று என பிரச்சார ஆம் ஆத்மி, இந்தாண்டில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து அதனை நிரூபித்துக்காட்டியது. தொடர்ந்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் தங்களின் வேரைப்பரப்ப ஆம் ஆத்மி பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் முகமாகவும் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்திலும் ஆட்சியமைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இதனை தொடர்ந்து, இலவச கல்வி, இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை என குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகிறார். 

காங்கிரஸால் கடுப்பான கெஜ்ரிவால் 

இந்நிலையில், இரண்டு நாள்கள் பயணமாக, அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்திற்கு நேற்று வந்தடைந்தார். இரண்டாவது நாளான இன்று, அகமாதாபாத்தில் தூய்மை பணியாளர்கள் உடனான கூட்டத்தில் பங்கேற்றார். அவர்களுடனான கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுபப்பட்டது. அப்போது செய்தியாளர் ஒருவர், ‘அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட வழி இல்லாத நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் கஜானாவில் இருக்கும் பணத்தை, குஜராத் தேர்தல் விளம்பரத்திற்காக ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறதே’ என்ற கேள்வியை எழுப்பினார். 

இதை யார் கூறியது என கெஜ்ரிவால் கேட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் ஒருவர் வைத்த குற்றஞ்சாட்டு என கூறினார். அதற்கு கெஜ்ரிவால்,”காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது. அவர்கள் கேட்பதை இங்கே கேட்காதீர்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், காங்கிரஸின் கேள்விகளை யாரும் காதுகொடுத்துக்கூட கேட்பதில்லை. குஜராத்தில் பாஜக ஆட்சி செய்யக்கூடாது என பொதுமக்கள் பலரும் நினைக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் ஓட்டு எங்களுக்குதான். குஜராத்தில் பாஜகவுக்கு மாற்று நாங்கள்தான்” என பதிலளித்தார். 

போலீசாருடன் கெஜ்ரிவால் வாக்குவாதம்

மேலும், ‘சமூக ஆர்வலர் மேதா பட்கரை, குஜராத்தின் முதலமைச்சர் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவிக்க உள்ளதாக பாஜக கூறுகிறதே?’ என கெஜ்ரிவாலை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,”நரேந்திர மோடிக்கு பிறகு பிரதமர் வேட்பாளராக அவர்கள் (பாஜக) சோனியா காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளார் என்று கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டுகிறார் என  அவர்களிடம் கூறுங்கள். அதற்கு அவர்கள் என சொல்கிறார்கள் என்று பார்ப்போம்” என பதிலடி கொடுத்தார். 

முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால், நேற்றிரவு ஆட்டோ ஓட்டுநர்களுடனான கூட்டத்திற்கு பங்கேற்றிருந்தார். அதன்பிறகு, ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வீட்டில் இரவு உணவை சாப்பிடுவதாக கூறி, அவரின் ஆட்டோவிலேயே பயணித்தார். ஆட்டோவில் சென்ற அவரை தடுத்த குஜராத் போலீசார் ஒருவர், நடைமுறையை மீறி செயல்படுவதாகவும், போலீசாருடன் ஒத்துழைத்து அரசு வாகனத்தில் செல்லும்படி கூறினார். இதை ஏற்க மறுத்த கெஜ்ரிவால் அந்த போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கெஜ்ரிவால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஆம் ஆத்மி கட்சியால் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. போலீசாரிடம் வாக்குவாதத்திற்கு பின்னும் ஆட்டோவிலேயே சென்ற அரவிந்த கெஜ்ரிவால், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் உணவருந்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.