புதுடெல்லி: பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூஸா கிராமத்தை சேர்ந்த ராப்பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைக்கு கனடாவை சேர்ந்தரவுடி கோல்டி பிரார் பொறுப்பேற்றார். கோல்டி பிராரின் நெருங்கிய நண்பர் லாரன்ஸுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் கோல்டி பிரார், லாரன்ஸுக்கு தொடர்பிருப்பதால் அவர்கள் சார்ந்த குழுக்கள் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கின் முக்கியத்துவம் கருதி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
பஞ்சாபின் மான்சா நீதிமன்றத்தில் என்ஐஏ அண்மையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 35 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் வெளிநாட்டிலும் 6 பேர் உள்நாட்டிலும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் பஞ்சாப், ஹரியாணா, டெல்லியில் சுமார் 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:
டெல்லியின் தாஜ்பூர் பகுதியில் உள்ள ரவுடி நீரஜ் பாவனாவின் வீடு, ஹரியாணாவின் யமுனா நகரில் உள்ள ரவுடி காலா ராணாவின் வீடு, பஞ்சாபின் பரிதாபாத்தில் உள்ள ரவுடி வினய் தியோராவின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி உள்ளோம்.
பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்குக்காக மட்டும் சோதனை நடத்தவில்லை. அவரது கொலையில் தொடர்புடைய சமூகவிரோத கும்பல்கள் கொலை, ஆள்கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள ரவுடிகள், அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க டெல்லி, ஹரியாணா, பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி உள்ளோம். இதில் முக்கிய தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஞ்சாப் காவல் துறை தலைவர் கவுரவ் யாதவ் கூறுகையில், ‘‘கனடாவில் உள்ள முக்கிய குற்றவாளி கோல்டி பிராரை கைது செய்ய இன்டர்போல் மூலம் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு உள்ளது. சித்து மூஸ்வாலா கொலை வழக்கு குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறோம். மாநில சிறப்பு புலனாய்வு குழுவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது’’ என்று தெரிவித்தார்.