ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது இதை கிராமமக்கள் மற்றும் பக்தர்களும் சீரமைத்து புதுப்பித்தனர். இந்நிலையில் இதன் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் 10 தேதி காலை 8 மணிக்கு வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், பின்னர் புதிய விக்கிரகங்கள் கரிகோலமும் , மாலை 5 மணிக்கு பகவத் பிரார்த்தனை, வேதபரபந்தம் தொடக்கம், இரவு மூலவர் பிம்ப ஸ்தாபனம், பூர்ணாகதி ஆகியவையும் , இரண்டாவது நாள் 11 தேதி காலையில் யாகசாலை பூஜைகள், ஹோமம், மகா சாந்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் கோபூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் ரக்க்ஷா பந்தனம், பூர்ணஹுதியும் நடைபெற்றது.
மூன்றாம் நாளான நேற்று காலையில் கோபூஜையும், விஸ்வரூப சேவை மூன்றாம்கால யாகசாலை பூஜையும், பின்னர் யாகசாலையில் இருந்து ஆரணி தாசரதி பட்டாச்சாரி தலைமையில் புனித எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது .
பின்னர் மாலை ஸ்ரீதேவி , பூதேவி வரதராஜபெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது, பின்னர் விசேஷ அலங்காரங்கள் செய்து பஜனை நிகழ்ச்சியும், வாண வேடிக்கையுடன் திருவீதியுலாவும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்களும், விழாகுழுவினரும் செய்திருந்தனர்.