தருமபுரி: “மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 88 லட்சத்து 33 ஆயிரத்து 88 பேருக்கு வீடு தேடிச் சென்று மருந்து பெட்டகங்கள் தரப்பட்டுள்ளது. நோயில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்” என்று தருமபுரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு ஆகிய நிகழ்ச்சிகள் இன்று (13-ம் தேதி) தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக, பாலக்கோடு வட்டம் கும்மனூர் அடுத்த நம்மாண்டஅள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: “துணை சுகாதார நிலையங்கள் தொடங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மருத்துவ கட்டமைப்புகளையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்கும் மருத்துவமனைகளுக்கான சொந்த கட்டிடங்களை மக்கள் முன்னிலையில் திறந்து வைத்து அதன் சிறப்புகளையும் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் விருப்பத்துக்கு ஏற்ப நேரில் வந்து அரசு கட்டிடங்களை திறந்து கொண்டிருகிறோம்.
இதுவரை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் யாருமே சென்றிடாத மலை கிராமங்களுக்கும் மருத்துவம் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மலை கிராமத்தில் இவ்வாறு நடந்த முகாமை பார்வையிட சென்றபோது 8 கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வசதி கேட்டனர். கால்களை இழந்த இருவர் செயற்கை கால் கேட்டனர். இதையறிந்த தமிழக முதல்வர் அவர்கள் இருவருக்கும் பேட்டரி செயல்பாட்டுடன் கூடிய அதிநவீன செயற்கை கால்களை பெங்களூருவில் இருந்து வரவழைத்து அவர்களுக்கு வழங்கி, அவற்றின் உதவியால் அவர்கள் நடந்து செல்வதைக் கண்டு மனம் மகிழ்ந்தார்.
மக்களைத் தேடி மருத்துவம் உலக அளவில் புகழ்பெற்ற ஒரு திட்டமாக இருந்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமிழகம் வந்தபோது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நேரில் சென்று ஆய்வு செய்து வியந்தார். மேலும், இந்த திட்டத்தை இந்தியா முழுக்க செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூறிச் சென்றார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 88 லட்சத்து 33 ஆயிரத்து 88 பேருக்கு வீடு தேடிச் சென்று மருந்து பெட்டகங்கள் தரப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 87 ஆயிரத்து 5 பேர் இந்த திட்டம் மூலம் இதுவரை பயன்பெற்றுள்ளனர். இதுவரை தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் சென்று அரசு திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்துள்ளேன். 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள 79 ஆயிரத்து 800 கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்பது என் இலக்கு. கடைக்கோடி மனிதனுக்கும் மருத்துவம் போய் சேர வேண்டும் என்பதற்காக முதல்வர் எங்களை பயணிக்க வைத்துள்ளார். நோயற்ற வாழ்வை அனைவரும் பெற வேண்டும், தமிழகத்தை நோயில்லா தமிழகமாய், நோய்வாய்ப்பட்ட மக்களே இல்லாத தமிழகமாக உருவாக்குவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் ஏற்படுத்தித் தந்துள்ளார்” என்று அமைச்சர் கூறினார்.