மதுக்கடைகளை மூடுவதன் மூலமே மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும்! அன்புமணி ராமதாஸ்

மதுக்கடைகளை மூடினால் மட்டுமே மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவத்துள்ள அன்புமணி ராமதாஸ், மாணவச் செல்வங்கள் மதுவுக்கு அடிமையாகாமல் கல்வியில் சிறக்கவும், சாதிக்கவும் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதன் மூலம் மட்டுமே மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டையை சுழற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் மது அருந்தும் கொடுமையும், அவலமும் பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. கடந்த 2015ம் ஆண்டு திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த 7 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதும், அவர்களில் இருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் மதுபோதையில் சாலையில் தகராறு செய்தது மட்டுமின்றி, அவரை கண்டித்த பொதுமக்களையும் ஆபாச சொற்களால் திட்டிய நிகழ்வும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வளவு சீரழிவுகள் நடந்தும் கூட, அதை தடுப்பதற்கான எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. அண்மையில் கூட திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச் சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி, ரகளை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் மதுபோதையில் தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். மது மாணவர்களின் வாழ்க்கையில் ஊடுருவி மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

கடந்த காலங்களில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்தன. 2003ம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலகங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ…. மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம்.

21 யதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் கோரிக்கைகளில் ஒன்றாகும். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வது சட்டப்படியே தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடையை செம்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தும்; இதற்கான அறிவிப்பு பலகை அனைத்து மதுக்கடைகளிலும் அமைக்கப்படும்; தேவைப் பட்டால் மது வாங்க வருபவர்களின் வயதை சரி பார்க்க பிறப்புச் சான்றிதழ் கூட கோரப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது.

ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை. மது கலாச்சாரம் மற்றவர்களை எவ்வாறு பாதித்திருக்கிறதோ, அதே அளவுக்கு மாணவச் செல்வங்களையும் பாதித்திருக்கிறது. மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதன் மூலம் மட்டுமே மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்க முடியும். எனவே, வருங்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம், மாணவச் செல்வங்கள் மதுவுக்கு அடிமையாகாமல் கல்வியில் சிறக்கவும், சாதிக்கவும் தமிழக அரசு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.