வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தஹி அந்த பதவிக்கு, மீண்டும் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2014ல் பா.ஜ., அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்தஹி நியமிக்கப்பட்டார். அவர் 2017 ல் அந்த பதவியில் இருந்து விலகினார். இருப்பினும் காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவருடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
இவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் கேகே வேணுகோபால்(91), அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020ல் நிறைவு பெற்றது. அத்துடன், தனது வயதை காரணம் காட்டி, பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் அவரை பதவியில் நீட்டிக்க மத்திய அரசு கேட்டு கொண்டது. இதனை ஏற்ற அவர் மேலும் 2 ஆண்டுகள் மட்டும் பதவியில் நீடிக்க ஒப்பு கொண்டார். இதன்படி அவரது பதவிக்காலம் வரும் செப்.,30 அன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், முகுல் ரோத்தஹி மீண்டும் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்., 1 முதல் அட்டர்னி ஜெனரலாக செயல்படுவார் என தெரிகிறது. இதற்கு முன்பு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த அவர், பல்வேறு முக்கிய வழக்குகளிலும் ஆஜராகி உள்ளார். மூத்த வழக்கறிஞரான அவர், குஜராத் மாநில அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் குஜராத் கலவர வழக்கு, தேசிய நீதித்துறை நியமன கமிஷன் வழக்கு, போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு ஆதரவாகவும் ஆஜராகி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement