முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லத்தில் ரெய்டு

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இரு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது, அத்துடன் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது., எஸ் பி வேலுமணி தற்போதைய தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடக்கிறது. மேலும் சேலம் சூரமங்கலம் பாரதி தெரு பகுதியில் வசித்து வரும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வசந்தகுமார் என்பவரது வீட்டில் சோதனையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஸ்ரீரங்க பாளையம் வித்யாளயா சாலையில் உள்ள மருத்துவர் மனோகர் என்பவரது வீட்டிலும், அஸ்தம்பட்டி பழனியப்பா நகர் பகுதியில் உள்ள மருத்துவர் சுஜாதா என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்டது தெரிந்துதே. அதன்படி தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.