சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று புதிய மருத்துவமனை தொடங்குவதற்கு விதிகளுக்கு மாறாக சான்றிதழ் வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். சட்டவிரோத குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மஞ்சக்கரனை பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு மாறாக சான்றிதழ் வழங்கியதாக எழுந்த புகாரில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
தனியார் மருத்துவக் கல்லூரியின் புதிய மருத்துவமனை தகுதியானது என, தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிமுறைகளுக்கு மாறாக சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை, சேலம், மதுரை, தேனி உள்பட விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.