
மோசடி வழக்கில் தொடர்பு : ஜாக்குலினுக்கு 3வது முறை சம்மன்
பெங்களூரை சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுகேஷ் மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.
மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின் நேற்று நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. தனக்கு சினிமா படப்பிடிப்பு இருப்பதால், வேறொரு நாளில் அதிகாரிகள் முன் ஆஜராக ஜாக்குலின் வழக்கறிஞர் மூலம் அனுமதி கேட்டார். இதை தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நாளை(14ம் தேதி) டில்லி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டில்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு ஜாக்லினுக்கு அனுப்பும் மூன்றாவது சம்மன் இது. இந்த முறையும் அவர் ஆஜாராகா விட்டால் கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.