மோடி, அமித் ஷாவின் ஏஜெண்டாக இருப்பதே மேல்: உத்தவ் தாக்கரேவை தாக்கிய ஏக்நாத் ஷிண்டே

மும்பை: யாகூப் மேமனின் ஏஜென்டாக இருப்பதற்குப் பதிலாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு  அந்தஸ்தை ரத்து செய்து பால் தாக்கரேவின் கனவை நனவாக்கியவர்களின் ஏஜென்டாக  இருப்பது நல்லது என்று ஏக்நாத் ஷிண்டே பேசினார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் சிவசேனா கட்சி அதிருப்தி தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், ‘யாகூப் மேமனின் (மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி) கல்லறையானது, யாருடைய ஆட்சிக் காலத்தில் அழகுபடுத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

நாங்கள் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் ஏஜென்டுகளாக செயல்படுகிறோம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. யாகூப் மேமனின் ஏஜெண்டாக இருப்பதற்குப் பதிலாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பால் தாக்கரேவின் கனவை நனவாக்கியவர்களின் ஏஜெண்டாக இருப்பது நல்லது. மராத்தி மொழி பேசும் மக்களை ஒழிக்க பாஜக எங்களை பயன்படுத்தி வருவதாக, சிவசேனா கட்சிப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

அந்த பத்திரிகையில், மராத்தி பேசும் மக்கள் ஏன் மும்பையை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றிய ஆய்வையும் வெளியிட வேண்டும். கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றிப் பெற்றபின்னர், வாக்காளர்களுக்கு யார் துரோகம் இழைத்தார்கள் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.