பிரிட்டன் வரலாற்றில் நெடுங்காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்டரா மேரி கடந்த வாரம் காலமானார் என்ற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், ராணி எலிசபெத்துக்காக உலக நாடுகள் பலவும் துக்கம் அனுசரித்தன. இந்த நிலையில், ராணி எலிசபெத்துக்காக மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட நபரை, சவுதி அரேபியா அரசு கைதுசெய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

ஏமன் நாட்டைச் சேர்ந்தவராக அறியப்படும் அந்த நபர், புனித யாத்திரையின்போது மெக்காவில் ராணி எலிசபெத்துக்காகப் பதாகை ஏந்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோவில், “ராணி எலிசபெத்துக்காக இந்த உம்ரா புனித யாத்திரை. சொர்க்கத்திலும், நீதிமான்கள் மத்தியிலும் அவரை ஏற்றுக்கொள்ளும்படி கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த நபர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உம்ரா என்பது எந்த நேரத்திலும் மேற்கொள்ளக்கூடிய ஒரு புனித யாத்திரை. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புனித யாத்திரை, ஹஜ் யாத்திரையிலிருந்து வேறுபட்டதாகும்.

ஆனால், மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் பதாகைகளை ஏந்தவோ அல்லது கோஷங்களை எழுப்பவோ சவுதி அரேபிய அரசு தடை விதித்திருக்கிறது.
இப்படியிருக்க, அந்த வீடியோவும் வைரலாக, சவுதி அரசும் அந்த வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது. இருப்பினும் அந்த வீடியோவில் பதாகை மங்கலாக இருந்தது எனச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, புனித யாத்திரைக்கான விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மீறியதால் அந்த நபருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.