கும்பகோணம் அருகே 23 அடி உயரம், 17 அடி அகலம், 15 டன் எடை கொண்ட உலகிலேயே மிக பிரமாண்ட நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடி மதிப்பில், பத்து ஆண்டு கடும் உழைப்பில் இந்தத் திருமேனி பழைமையான விக்ரக அமைப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அற்புதமான திருமேனியை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், வேலுார் நாராயணி பீடத்திடம் ஒப்படைத்தார்.
கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் வரதராஜன் என்பவர் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிற்பச்சாலை நடத்தி கடந்த 24 ஆண்டுகளாக சிலை வடிவமைப்பில் சிறந்து விளங்கி வருகிறார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருக்கும் நடராஜர் மற்றும் கோனேரிராஜபுரம் விக்ரகங்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட மிகவும் பழைமையான வடிவிலானவை. அதேபோன்று முயலவன் மீது ஆனந்த தாண்டவம் ஆடும் வடிவிலான நடராஜர் திருமேனியை வடிவமைக்க வரதராஜன் முடிவு செய்தார். உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையாகத்தான் வடிவமைக்கும் சிலை இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்.
அதன்படி 23 அடி உயரத்தில் நடராஜர் சிலை செய்யவும் அதிலுள்ள திருவாச்சியில் பூதகணங்கள், சிம்மம், பாம்பு போன்ற சிற்பங்களும் அதன் மேல் சிவ அச்சரங்கள், தீச்சுடர்கள் உள்ளிட்டவையுடன் கலை நயத்துடன் உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொண்டார்.
அதன்படி 2010-ம் ஆண்டு ஐம்பொன்னில் ஒற்றை வார்ப்பு முறையில் ஊற்றி 23 அடி நடராஜர் சிலை வடிவமைக்கும் பணியினை மேற்கொண்டார். உற்சாகமாகத் தொடங்கப்பட்ட நடராஜர் சிலையை வடிவமைக்கும் பணிகள் போதிய நிதி இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து வேலுார் நாராயண சக்தி பீடம் சிலையை வடிவமைக்க முன் வந்தது.
பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு வேலுார் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு மீண்டும் நடராஜர் சிலை வடிவமைப்பதற்கான பணிகளை வரதராஜன் தொடங்கினார். கிட்டதட்டப் பத்து வருடங்கள் கடும்முயற்சியின் பலனாக ரூ 4 கோடி மதிப்பில் நடராஜர் சிலையினைச் செய்து முடித்தார் வரதராஜன். தன் கனவு நிஜமான மகிழ்ச்சியில் சிலைக்கான பணிகள் முடிவடைந்ததை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்தார். அதன்படி சிலை பணிகள் முடிவடைந்த விழா மற்றும் சிலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று (12.9.22) திம்மக்குடியில் நடைப்பெற்றது.
இதில் புதுச்சேரி மாநிலத் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், வேலுார் நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேஷ்பாபு, நக்கீரன் கோபால், கயிலாய வாத்தியங்களின் தந்தை சிவ,கா.ராமலிங்கம், புதுச்சேரி, நால்வரின் நாயகன் நற்றமிழ் வேந்தன் நல்லிசைச் செல்வன் அடியார் திருக்கூட்ட பிரபு, புதுச்சேரி பன்னிரு திருமுறை ஓதுவார் சம்பந்தமூர்த்தி, முக்கியஸ்தர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
23 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை வெட்டி வேர் மற்றும் தாமரை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கம்பீரமாகக் காணப்பட்ட பிரமாண்ட நடராஜர் சிலை காண்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழிசை செளந்தரராஜன், வேலுார் நாராயணி பீடத்தின் டிரஸ்டி சுரேஷ்பாபு ஆகியோர் நடராஜர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்தனர். இதையடுத்து பன்னிரு திருமுறைப் பதிகங்களை ஓதுவார்கள் பாடினர். சிவ பூதகணநாதர் கயிலை வாத்தியங்கள் முழங்க, நடராஜர் சிலைக்குப் பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இது குறித்து சிலை வடிவமைத்த வரதராஜன் கூறியதாவது, “இந்திய அரசின் ஒப்புதலோடு நான் ஏற்கெனவே கடந்த 2003-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள அணு ஆராய்ச்சி மையத்திற்காக சோழர் காலத்து சிற்ப பாணியில் 11 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். உலகிலேயே மிகவும் உயர கொண்ட நடராஜர் சிலை வடிவமைக்க முடிவு செய்தேன்.
23 அடி உயரம், 17 அடி அகலத்தில் சுமார் 15 டன் எடையில் ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையினை 10 ஆண்டு கடும் முயற்சியில் உருவாக்கினேன். இச்சிலையில் 51 சிவ அட்சரங்களைக் குறிக்கும் வகையில் 51 தீச்சுடர்கள், திருவாச்சியில் 52 சிம்மங்கள், 56 பூதகணங்கள், 102 தாமரை மலர்கள், 2 மகர பறவைகள், 34 நாகங்களின் உருவங்க காலில் முயலகன் கொண்டிருப்பதுபோல் இந்தத் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ நடராஜர் இயங்கி கொண்டிருப்பதால்தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. சிதம்பரத்தில் நடராஜர் உலகத்தின் மய்யப் புள்ளியில் இயங்கி கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நம்மைப் படைத்த இறைவனை, நம்மாலும் படைக்க முடியும் என இந்தச் சகோதரர்கள் நிரூபித்துள்ளனர். சிவன் மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. பெண்கள் 10 மாதம் சுமந்தால், ஒரு குழந்தை, இவர்கள் 10 வருடம் ஒரு குழந்தையை வடிவமைத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன், எல்லோருக்கும் அருள் புரிந்து காப்பார்” என்றார்.