கோவை: கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், நண்பர்கள் வீடுகள், பினாமி நிறுவனங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 முறை சோதனை நடந்த நிலையில், 3வது முறையாக வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அம்மன் அர்ஜுனன், அருண்குமார், கந்தசாமி, தாமோதரன் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு செல்லும் இணைப்பு சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளை வைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடியதாலும், போலீசாருடன் வாக்குவாதம் செய்ததாலும் வேலுமணியின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்த எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.