அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலைமுதல் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பாக வெளியான தகவலில் கோவை மாவட்டம் குனியாமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அவரின் பதவிக் காலத்தில் நடைபெற்ற கிராமப்புறங்களின் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் பதிவு செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் அவரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி-யின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டு வருகின்றனர். மேலும், அவரின் நண்பர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னும் அவரின் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது இந்த சோதனை நடந்து வருகிறது.
அதேபோல, அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை ஈடுபட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும், இந்த மருத்துவமனையில், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கும் முரணாக சர்டிபிகேட் வழங்கியுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும் சேலத்தில் 3 இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள இடங்களில் என மொத்தம் 13 இடங்களிலும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.