லோகேஷ் கனகராஜ் எடுக்க மறந்த காட்சி : காயத்ரி வெளியிட்ட தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தற்போது 100 நாட்களையும் கடந்து விட்டது. விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் உருவாகியிருந்த இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை காயத்ரிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். படத்தின் கதைப்படி பஹத் பாசிலின் காதலியான அவர் இடைவேளையில் விஜய்சேதுபதியால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுவதாக காட்சி அமைந்திருந்தது.

தற்போது அந்த படத்தில் எடுக்கப்பட்ட தனது இறப்பு சம்பந்தமான காட்சியுடன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள காயத்ரி ஒரு புதிய தகவலையும் கூறியுள்ளார்.

“பொதுவாக இப்படி ஒருவர் இறப்பது போன்று காட்சி எடுத்தால் உடனே அடுத்து அவர் சிரித்துக்கொண்டே இருப்பது போன்று அடுத்ததாக இன்னொரு ஷாட் எடுப்பது சினிமாவில் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதாவது சம்பந்தப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை சொல்வதற்காக இந்த படம் புகைப்படம் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால் விக்ரம் படத்தில் இந்த காட்சி எடுத்து முடிக்கப்பட்டதும் நான் சிரித்துக்கொண்டே இருப்பது போன்ற ஒரு காட்சியை எடுக்க மறந்துவிட்டனர்.

அதற்கடுத்த காட்சிகளை எடுக்க வேண்டியது, லைட்டிங் மாற்றுவது போன்ற பரபரப்பான வேலைகள் அடுத்தடுத்து இருந்ததால் இந்த காட்சியை எடுக்க முடியவில்லை. ஆனால் அதன்பின்னர் அதை உணர்ந்ததும் அதற்கு பதிலாக இயக்குனர் மற்றும் ஆர்ட் டைரக்டருடன் இணைந்து சிரித்தபடி புகைப்படங்களை எடுத்தோம். அந்தவகையில் இது சினிமாவில் ஒரு புதிய முன்னெடுப்பு என்று சொல்லலாம். இப்போது என்னிடம் உங்க தல எங்க என்று யாரும் கேட்டால் இதோ இருக்கு பாருங்கடா என்று சொல்வேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார் காயத்ரி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.