தமிழ் சினிமாவில் நகைச்சுவை மட்டுமல்லாது சமூக சிந்தனைகளையும் விதைத்து மக்கள் மனதில் என்றென்றும் இடம்பிடித்திருப்பவர் விவேக். சின்னக் கலைவாணர் என பட்டம் பெற்ற அவர், மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அவரின் இழப்பு தமிழ் சினிமாவில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என திரைக்கலைஞர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அவர் மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் மற்றும் சமூக பணிகள் இன்றும் அவரை நினைவுகூற வைக்கிறது. அப்படி, அவருடன் நடித்த நகைச்சுவை நடிகரான முத்துக்காளை, விவேக் குறித்து பெருமிதமாக பேசியுள்ளார்.
நடிகர் விவேக் குறித்து அவர் பேசும்போது, நகைச்சுவை நடிகர்களுக்கு அதிகம் உதவி செய்பவர் விவேக் எனத் தெரிவித்துள்ளார். சினிமாவில் இருக்கும் திரைக்கலைஞர்களின் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்திருக்கிறார் எனக் கூறியிருக்கும் அவர், வடிவேலு அப்படி எந்த உதவியும் செய்யவில்லை, எதிர்பார்க்கவும் முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் முத்துகாளை பேசும்போது, ” நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவை விட விவேக் தன் உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு அதிகமாக உதவி செய்வார். திரைக் கலைஞர்களின் பிள்ளைகளின் படிப்புக்கு கூட உதவுவார். அவர் புத்தகங்கள் அதிகம் படிப்பதால் காமெடி ஐடியாக்கள் நிறைய வரும். வடிவேலுக்கு அப்படி இல்லை” எனக் கூறியிருக்கிறார்.
மேலும், விவேக்குடன் சேர்ந்து படம் நடித்துவிட்டால், மீண்டும் தன்னுடன் அந்த கலைஞர்களை வடிவேலு சேர்த்துக் கொள்ள மாட்டார் என கூறியிருக்கும் அவர், தன் உடன் பயணிப்பவர்களை வடிவேலு வளரவும் விடமாட்டார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நடிகர் முத்து காளை, விவேக் மற்றும் வடிவேலு என இருவருடன் படங்களில் இணைந்து நடித்துள்ளார். செத்து செத்து விளையாடுவோமா.. என அவர் வடிவேலுவுடன் செய்த காமெடி, அவருடைய சினிமா வாழ்க்கையில் இன்றும் ஹைலைட் காமெடிகளில் ஒன்றாக இருக்கிறது.