சென்னை : நடிகர் வடிவேலு இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
கடந்த சில காலங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த வடிவேலு மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் நாயகனாவும் மாமன்னன் படத்தில் காமெடியனாகவும் வடிவேலு நடித்து வருகிறார்.
சிரிப்பு சரவெடி வடிவேலு
நடிகர் வடிவேலு சிரிப்பு சரவெடியாக கோலிவுட்டில் சிறப்பான பல படங்களை கொடுத்தவர். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் இவரது காமெடிக்காகவே வெற்றிப் பெற்ற வரலாறுகளையும் இவர் உருவாக்கியவர். இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டவர் வடிவேலு.

வைகைப்புயல் வடிவேலு
வைகைப் புயல் உள்ளிட்ட பல பெயர்களால் கொண்டாடப்படும் வடிவேலு, நீண்ட காலங்களாக நடிக்காமல் இருந்தார். ஆனாலும் அவரது காமெடிப் படங்கள் தான் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அனைவரின் ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் செயல்பட்டு வந்தது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்
இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. இந்தப் படத்தில் நாய்களுக்கும் அவருக்குமான சூழ்நிலைகளை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவேலு 62வது பிறந்தநாள்
இந்நிலையில் வடிவேலுவின் 62வது பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மிகவும் கலக்கலான இந்த போஸ்டரில், நாயை குழந்தையை போல கட்டிக் கொண்டு காட்சியளிக்கிறார் வடிவேலு. மேலும் சுற்றிலும் டான்சர்களும் காணப்படுகின்றனர். இது ஒரு பாடலுக்கான போஸ்டராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பொருத்தமான தலைப்பு
லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். முன்னதாக தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் நடிகர் வடிவேலு. அதன் தொடர்ச்சியாக தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பொருத்தமான தலைப்புடன் இந்தப் படம் உருவாகி வருகிறது.