செங்கல்பட்டு : திருப்போரூர் பகுதியில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோர் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் – கலா தம்பதியினர்.
இவர்களது மகன் இராஜ் . இவர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் மின் பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
நேற்று திருமணம்
நேற்று 12ஆம் தேதி திருப்போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மணமகன் ராஜ் தான் வேலை செய்யும் கல்லூரியில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழைக் கொடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். இதில் நிலை தடுமாறிய மணமகன் ராஜ் சாலைத் தடுப்பில் மோதி ராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

திடீர் விபத்து
கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் சென்னை மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் விபத்தில் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூளைச்சாவு
முன்னதாக நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் ஆலோசனை செய்து ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்போரூர் போலீசார் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தனர்

உடலுறுப்புகள் தானம்
திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடல் உறுப்பை தானம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் உயிரிழந்த ராஜின் உடல் உறுப்பு தானத்தின் மூலம் அவரின் உடல் உறுப்புகளை பெற்ற பலர் வாழ்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.