விராலிமலை : விராலிமலை அருகே விற்பனைக்கு வைத்திருந்த நாட்டு வெடி வெடித்தில் வீடு இடிந்து நாசமானதோடு இவ்விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் உட்பட 5 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குபட்டி சித்த குடிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி(55). இவர் நாட்டு வெடிகளை தயாரித்து அப்பகுதிகளில் விற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் தயாரித்த பெருமளவிலான வெடிகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் நேற்று(திங்கள்கிழமை) இரவு வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டதாம் அதை அடிப்பதற்காக குச்சியை எடுத்து பாம்பை அடிக்க முற்பட்டபோது குச்சி தவறுதலாக மின் இணைப்பின் ஒயரில் பட்டு அதிலிருந்து வெளிவந்த மின் கசிவால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியில் தீ பட்டு மளமளவென்று வெடிகள் வெடிக்க தொடங்கியுள்ளது.
இதில் சுதாரித்து வீட்டிற்குள் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இருப்பினும் இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரன்(26), சுப்பிரமணி, விஜயராணி(28), ராமகிருஷ்ணன்(39) மற்றும் 5 வயது சிறுவன் மோகன்ராஜ் ஆகிய ஐந்து பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகேஸ்வரன் 50 சதவீதத்திற்கு மேல் காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.