பாகிஸ்தான் மக்கள் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் கனமழை காரணமாகச் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதனால் பாகிஸ்தான் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜலால்கான் என்ற கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு இந்துக்கள் தங்கள் கோயிலில் அடைக்கலம் கொடுத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உடனடியாக அந்தக் கோயிலுக்கு வரும்படி இந்துக்கள் ஒலிபெருக்கியின் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
மேலும் அந்தக் கோயிலில் தஞ்சமடைந்திருக்கும் சுமார் 200 முதல் 300 பேருக்கு இந்துக்கள் தங்கள் செலவில் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனர். அதுமட்டுமலாமல் முஸ்லிம்கள் வளர்த்து வரும் கால்நடைகளையும் கோயில் வளாகத்தில் கட்டி, இந்துக்கள் பராமரித்து வருவதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இந்துக்களின் இந்தச் செயல் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதாக நெகிழ்கிறார்கள் இணையவாசிகள்.