புதுடெல்லி: அத்வைத ஆச்சார்யரான ஆதி சங்கரர் தோற்றுவித்த துவாரகா பீடத்தின் அதிபதியாக இருந்து வந்தவர் ஜகத்குரு ஸ்வரூபானந்த சரஸ்வதி. மத்திய பிரதேசத்தின் நர்சிங்பூரில் உள்ள ஜோதீஸ்வர் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவருக்கு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் மாலை 3.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.
மத்தியபிரதேசத்தில் உள்ள சியோனி மாவட்டத்தின் டிகோரி கிராமத்தில் 1924-ம் ஆண்டு பிறந்த இவர், பத்ரிநாத்தில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாராக இருந்த பிரம்மானந்த சரஸ்வதியின் சீடராக இருந்தார்.
குஜராத்தில் உள்ள துவாரகா பீடம் மற்றும் உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடம் ஆகிய 2 மடத்துக்கும் தலைவராக இருந்து வந்த சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அகில பாரதிய ராம ராஜ்ஜிய பரிஷத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். 9 மாதம் வாரணாசி சிறையிலும், 3 மாதம் ம.பி. சிறைகளிலும் இருந்தார்.
1981-ல் சங்கராச்சாரியார் பட்டத்தை பெற்ற அவர் தொடர்ந்து பீடாதிபதி பதவியில் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சுவாமி ஸ்வரூபானந்தா பெங்களூருவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் ஜோதீஸ்வர் ஆசிரமத்துக்குத் திரும்பிய அவருக்கு நேற்றுமுன்தினம் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறும்போது, “சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை பின்பற்றுபவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாகூறும்போது, “சனாதன தர்மத்தை பரப்புவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும்’’ என்றார்.