‘‘தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்; சீரழிந்த இந்தச் சூழ்நிலையை மாற்றி அமைப்போம்’’ என்று சொல்லி, 127 பக்கங்கள் கொண்ட கவர்ச்சிக்கரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. “ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டில், தமிழகம் மாற்றத்தைக் கண்டிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள… கொஞ்சம் வேலூர் பக்கம் வந்துச்செல்லுங்கள்!” என்று அழைக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். ஆம், ‘மாநகராட்சி’ என்பதில் பெயரளவில் மட்டுமே தரம் இருக்கிறது. ஆனால், மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக்கூடிய நீர்நிலைகளும் பராமரிப்பின்றி குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. குடிமராமத்துப் பணிகளும் செய்யப்படவில்லை. குடிநீர் ஆதாரமாக விளங்கும் வேலூர் சதுப்பேரி, காட்பாடி கழிஞ்சூர் ஏரி உள்ளிட்டவை தூர்ந்துபோன நிலையிலேயே காட்சியளிக்கின்றன.
இந்த கழிஞ்சூர் ஏரி, தமிழகத்தின் மூத்த அமைச்சரும் தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான துரைமுருகனின் தொகுதியான காட்பாடிக்குள் இருக்கிறது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட இந்த ஏரி நிரம்பி அதன் உபரிநீர் தாராபடவேடு, பிரம்மபுரம், சேவூர், கார்ணாம்பட்டு, அன்பூண்டி ஏரிகளுக்குத் திருப்பிவிடப்படும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கழிஞ்சூர் ஏரியில் நிரம்பி வழிந்த நீரை அமைச்சர் துரைமுருகன் மலர்த்தூவி வரவேற்றார். அப்போது அவர், ‘‘கழிஞ்சூர் ஏரியில் செயற்கைத் தீவை உருவாக்கி, பொழுதுப் போக்கிற்காக உல்லாச படகுசவாரிக்கு ஏற்பாடு செய்கிறேன். காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்ய கரைகளில் சிமென்ட் தரையையும் அமைத்துக்கொடுக்கிறேன். இந்தப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்படும்’’ என்றார். இடையில் ஒருநாள், கழிஞ்சூர் ஏரியை சுற்றுலாத் தலமாக்குவதற்காக நிதியையும் ஒதுக்கிவிட்டதாகக் கூறியிருந்தார் துரைமுருகன்.
அமைச்சர் சொல்லியே, ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், கழிஞ்சூர் ஏரியில் தண்ணீர் வற்றியதே தவிர அதன் அவலநிலைக் கொஞ்சமும் மாறவில்லை. இந்த நிலையில், ஏரியின் கரைகளிலும், மற்ற ஏரிகளுக்கு உபரிநீர் செல்லும் நீர்வழித்தடங்களிலும் மாநகராட்சி ஊழியர்களே குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். அந்தப் பகுதி வீடுகளிலிருந்தும் நேரடியாக நீர்வழிக் கால்வாய்க்குள் கழிவுநீர் விடப்படுகிறது. இதற்காக சிலர் பைப்புகளையும் புதைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர், ‘‘மாநகராட்சி ஊழியர்களே சுற்றுப்புற சுகாதார அக்கறையின்றி குப்பைக் கழிவுகளை கொண்டுவந்து கழிஞ்சூர் ஏரியில் கொட்டிவிட்டுச் செல்வதால், வணிகத் தொழில் செய்யும் தனியாரும் பல்வேறு விதமான கழிவுகளை ஏரிக்கால்வாய்களில் தயக்கமின்றி கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். இதனால், ஏரியைச் சுற்றிலும் துர்வாடை வீசுகிறது. காற்றில் அடித்துச்செல்லப்படும் குப்பைகள் தண்ணீரில் கலந்திருப்பதால், நீர் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மாசடைந்து காணப்படுகிறது.
எனவே, கழிஞ்சூர் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை அமைச்சர் துரைமுருகனும், மாநகராட்சி நிர்வாகமும் தடுத்து நிறுத்த வேண்டும். இப்போது நிலவும் சுகாதாரமின்மையை சரிசெய்ய வேண்டும். அமைச்சர் சொல்லியதைப்போல விரைவில் சுற்றுலா தலமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் கழிஞ்சூர் ஏரியை புனரமைப்பதில் பெரும் சிரமமும், வருவாய் இழப்பும் ஏற்படும்’’ என்றனர்.
கழிஞ்சூர் ஏரியின் அவலநிலையை எடுத்துக்கூறி விளக்கம் கேட்பதற்காக வேலூர் மாநகராட்சி ஆணையரைச் சந்திக்க, அவர் அலுவலகத்துக்குச் சென்றோம். பணி நிமித்தமாக ஆணையாளர் வெளியில் சென்றிருந்ததால், மேயர் சுஜாதாவை அணுகி கேள்வி எழுப்பினோம். ‘‘கழிஞ்சூர் ஏரியில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நீங்கள் சொல்லிதான் என் கவனத்துக்கு வந்திருக்கிறது. உடனடியாக, மாநகராட்சி ஆணையாளரிடம் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று உறுதியளித்தார்.